சிலுவைப் பாதை


முதல் நிலை 

இயேசு சாவுக்கு தீர்ப்பிடப்படுகிறார்

  யூதர்களின் அரசரைபுறவினத்தாரின் ஆளுநன் பிலாத்துவிடம் கையளிக்கின்றனர் யூதர்கள். அவர்கள் இயேசுவின் மேல் மூன்று பொய்க் குற்றங்கள் சுமத்தினர். முதல் குற்றம் இவன் சீசருக்கு வரி செலுத்தக் கூடாது என்கிறான் என்றனர். இயேசுவோ செசாருக்குரியதை செசாருக்கு செலுத்துங்கள் என்று சொல்லியிருந்தார். இரண்டாம் குற்றம் நாட்டு மக்களிடையே கலகம் உண்டாக்குகிறான் என்றனர். ஆனால் இயேசு கலகக்காரராய் இருந்திருந்தால் ஆளுநன் பிலாத்துவோ ஏரோதுவோ அதை அறியாமலிருக்க முடியாது. இதற்கு முன் அவர் மேல் யாரும் இப்படி குற்றம் சுமத்தியதில்லை. மூன்றாம் குற்றம் இவர் தன்னையே அரசனாக்கிக் கொள்கிறான் என்றனர். ஆனால் இயேசுவோ, தன்னை மக்கள் அரசனாக்க விரும்பியபோது அவர்களிடமிருந்து தப்பித்து சென்று தனிமையில் செபித்தார். அநியாயம் ஆட்சி செய்யும்போது உண்மை என்ன செய்ய முடியும்! இதோ! பொய் கூச்சலிடுகிறது பயம் தீர்ப்பளிக்கிறதுஉண்மை மௌனம் காக்கிறதுசத்தமில்லாமல் சத்தியம் சாகடிக்கப்படுகிறது. இயேசுவுக்கு மரண தண்டனை அரங்கேறுகிறது.
அநியாயமாய்த் துன்புறும் குடும்பங்களுக்காய் செபிப்போம்
இரண்டாம் நிலை

இயேசுவின் தோள்மேல் பாரமான சிலுவை

   பிலாத்து மூன்றுமுறை இயேசுவை விடுவிக்க வழிதேடினான். முதல் முறை அவரிடம் குற்றம் ஏதும் காணவில்லை என்றான். இரண்டாம் முறை பரபாஸ் வேண்டுமா இயேசு வேண்டுமா என்று கேட்டான். மூன்றாம் முறை இயேசுவை சாட்டையால் அடித்து மக்கள் முன் நிறுத்தினான். மும்முறையும் தோல்வியடைந்தான். உரோமானியர் வழக்கப்படி சாவுக்கு தீர்ப்பிடப்பட்ட கைதியின் முன்ஒரு நீண்ட கோலை எடுத்து, இரண்டாக ஒடித்துஅதை கைதியின் கால்களை நோக்கி வீசி, “நீ சிலுவையில் துன்புறுவாய்” என்று தீர்ப்பிடுவது மரபு. அதைத் தான் பிலாத்து செய்தான். அவன் வீசியெறிந்த இரு மரத்துண்டுகளும் இயேசுவின் காலடியில் சிலுவைக்குறியாய் மாறிக் கிடந்தன. இயேசுவின் தோள்மேல் சிலுவை சுமத்தப்படுகிறது. ஏளனமாய் கருதப்பட்ட சிலுவை ஏசுவின் தோள் தொட்தால் மீட்பின் சின்னமாய் உருமாறுகிறது.
கணவனை இழந்த குடும்பங்களுக்காக செபிப்போம்.
மூன்றாம் நிலை
இயேசு தரையில் விழுகிறார்
இயேசு கீழே விழாமல் சிலுவை சுமந்து சென்றிருக்க முடியாதாதந்தை ஏன் அவரை விழுவதற்கு அனுமதித்தார்அவரால் செய்திருக்க முடியும். நீ விழும் போது எழுகின்ற வலி எனக்கும் தெரியும் என்று நமக்கு எடுத்துக் காட்ட இயேசு விழுகிறார். இயேசு விழுவதற்கு வெட்க்ப் படவில்லை. சிலுவை பாரமானது என்று ஏற்றுக்கொள்ள கவலைப்படவில்லை. நாம் ஏன் தோல்விகளுக்கு வெட்கப்பட வேண்டும். இயேசுவை விழுவதற்கு அனுமதித்த தந்தைநாமும் விழுவதற்கு, தோல்வியடைய அனுமதிக்கிறார். காரணம்தோல்வியில் தான் பாடங்கள் கற்றுக்கொ்ள்கிறோம். தோல்வியில் தான் தாழ்ச்சியைப் பெற்றுக்கொள்கிறோம். தோல்வியில் தான் தோற்றவரின் வேதனைகள் உணர்ந்து கொள்கிறோம்.
வறுமையில் வாடும் குடும்பங்களுக்காக செபிப்போம்.
நான்காம் நிலை
இயேசு தம் தாயை சந்திக்கிறார்
     இயேசு தாம் தாயின் முன் மௌனம் காக்கிறார். தன் பாடுகளிலே ஏற்கனவே 5 முறை மௌனம் காத்தார் இயேசு. சதுசேயன் ஏரோதின் முன் வாய் திறக்கவில்லை. தலைமை குருவின் கேள்விகளுக்கு வாய் திறக்கவில்லை. தலைமைச் சங்கத்தின் முன் இயேசு பேசவில்லை. பிலாத்து கேட்ட ஏழு கேள்விகளில் இரண்டு முறை இயேசு பேசவில்லை. இதோ! இங்கேயும் இயேசு பேசவில்லை. இயேசு தன்னைப் பாதுகாக்க என்றுமே பேசியதில்லை. அடுத்தவருக்காய்த் தான் பேசியிருக்கிறார்.அவர் பேசியபோதெல்லாம் ஒரு ஆயனாய்த்தான் பேசினார்… வழி நடத்த. ஆனால் துன்புறும் ஆடாய்இயேசு வாய் திறந்தது இல்லை. எனவே தான்… இந்த மாசற்ற செம்மறி மௌனமாய் மாதாவைப் பார்த்துவிட்டு அப்பா காட்டிய வழியில் அமைதியாய்… அநாதையாய் தொடர்ந்து நடக்கிது.
பெற்றோரை இழந்த குடும்பங்களுக்காக செபிப்போம்.
ஐந்தாம் நிலை
சீமோன் இயேசுவுக்கு உதவுகிறார்
இயேசுவின் தாழ்ச்சி இமயமாய் உயர்ந்து நிற்கிறது. படைப்பனைத்தையும் ஒற்றைச் சொல்லால் பரப்பிப் பார்த்த இறைவன்தான் படைத்த முகமறியா மனிதன் ஒருவரின் உதவி வேண்டி நிற்கிறார். முதன்முறையாய் இயேசு தம் சிலுவையைதுன்பத்தைப் பகிர்ந்துகொள்கிறார். வேடிக்கைப் பார்க்க வந்த சீமோன் வேண்டா வெறுப்பாய் சிலுவையை வாங்குகிறார். ஏன் எனக்கு மட்டும் சிலுவைஇத்தனை ஆயிரம் மக்கள் இங்கே சூழ்ந்து நிற்க… எனக்கு மட்டும் ஏன் இந்த அவமானம் பங்கு – அருயாயப் பரிசுகோபத்தோடு சிலுவை வாங்கிய சீமோன் குணம் மாறிப போகிறது. இந்த ஒற்றைச் செயலால் சீமோனின் பெயர் வரலாற்று ஏடுகளில் நீங்காத இடம் பிடித்து விடுகிறது. உலகத்தின் பல்வேறு மூலைகளில் இயேசுவின் சிலுவைச் சுமக்கும் கோடிக்கணக்கான (ஏழை) மக்களின் பிரதிநிதி. ஆனால்… நாம் விரும்பாமல் சுமத்தப்படும் சிலுவைகள் கூட நம் ஆன்மாவுக்கு அளவில்லா மாற்றங்களைத் தரும் அருள்கருவிகளாய் மாறுகின்றன.
துன்புறும் குடும்பங்களுக்காக செபிப்போம். 
ஆறாம் நிலை
வெரோணிக்கா இயேசுவின் முகம் துடைக்கிறாள்
இயேசுவிடம் உதவி பெற்ற நூற்றுக் கணக்கான மனிதர்கள் எங்கேமூன்று ஆண்டுகள் உறவாடி, உணவருந்திய சீடர் கூட்டம் எங்கேஇயேசுவின் கண்கள் தெரிந்தோரைத் தேடுகிறது. தெரிந்தோரும் தெரியாதவர்களாய்....சிலர் எதிர்க்கட்சியினராய் எதிர்ப்புறத்தில்... தேவையின் போது இயேசுவைத் தேடி வந்தவர்கள்இயேசுவுக்குத் தேவைப்பட்டபோது இயேசுவை மறந்துவிட்டனர். இயேசுவை விட்டுப் பறந்துவிட்டனர். தன் சிலுவையைச் சீமோன் சுமக்கசற்றே நிமிர்ந்து நடந்த இயேசுதன்னந்தனி ஆளாய் விடப்பட்ட இயேசு, மானிடரின் நன்றி கெட்ட தனத்தை மனதில் சிலுவையாய் சுமந்து நடக்கிறார். மனுக்குலத்தில் மனிதாபிமானம் முழுவதுமாய் செத்துபோய் விடவில்லை என்பதன் அடையாளமாய் எங்கிருந்தோ வந்தவள்… இரத்தம் வடியும் இயேசுவின் முகத்தைத் துடைக்கிறாள். 
பிரிந்து கிடக்கும் குடும்பங்களுக்காக செபிப்போம்.
ஏழாம் நிலை
இயேசு இரண்டாம் முறை தரையில் விழுகிறார்
      சீண்டி விட்டால் மிருகங்கள் கூட சினந்து கொள்கின்றன. கூட இருந்தவர் கூட்டம் நிலைமை தலைகீழானதைக் கண்டு தலைமறைவான பின்புபுற இனத்தாரும் - யூதரும்மதத் தலைவர்களும் - மக்களும் சூழ்ந்து நிற்கும் படைவீரரும்கொலைகாரரும் இயேசுவை எல்லை தாண்டி ஏளனம் செய்யஇயேசு விழுகிறார். அடிப்பதற்கு தைரியம் தேவை. திருப்பி அடிக்க ஆத்திரம் தேவை. ஆனால் திருப்பி அடிக்க முடிந்தும் அமைதியாய் இருக்க அளவுக்கதிகமான தைரியம் தேவை. இயேசுவால் எப்படி முடிந்ததுஇயேசுவின் வீழ்ச்சி அவரின் பலவீனம் என்று எதிரிகள் தப்புக் கணக்குப் போட்டு விட்டனர். இயேசுவின் தோற்றத்தை வைத்து… அவர் தோற்றுப் போனவர் என்று எண்ணிவிட்டனர். அவரது வீழ்ச்சி… பலவீனத்தின் அடையாளம் அல்ல. அவரது பலத்தின் அடையாளம். நாம் கூட ஏழைகள்நோயாளிகள்முதியவர்கள் போன்றோரை… தோற்றத்தை...வைத்துவாழ்வைத்தொலைத்தவர்கள் என்று கணித்து விடுகிறோம்… ஆனால்… அவர்கள் வீழ்ந்து கிடக்கும் இயேசுவுக்கு சொந்தக்காரர்கள்… இயேசு அவர்களில் விழுந்து கிடக்கிறார்.
தோல்வியில் வாழும் குடும்பங்களுக்காய் செபிப்போம். 
எட்டாம் நிலை
இயேசு எருசேலம் பெண்களுக்கு ஆறுதல் கூறுகிறார்
     மனிதனின் கண்ணீர் ஒருபோதும் வீண்போனதில்லை. ஒரு முறை ஓரு விபச்சாரப் பெண் இயேசுவின் கால்களைத் தன் கண்ணீரால் கழுவியபோது, இயேசு அவளது பாவங்களைக் கழுவினார் - அதே கண்ணீரால்! இன்னொரு முறை ஒரே மகனைப் பறிகொடுத்த விதவைத் தாய்பாடையின் முன் அழுது கொண்டே வந்தபோது, இறந்த அவளது மகனைதானே முன் வந்து உயிர்கொடுத்து, கண்ணீரைத் துடைத்தார். இயேசுமூன்றாம் முறைலாசர் இறந்தபோது – அங்குக் கூடியிருந்த மக்களின் கண்ணீரைக் கண்டுஇயேசு தாமே அழுதார். இதோ! இங்கேயும் கண்ணீர்பிலாத்துவின் தீர்ப்புக்குப் பின் மௌனமாகிப் போன இயேசுதன் தாயிடம் கூடப் பேசாத இயேசுபெண்களின் கண்ணீரைக் கண்டு சிலுவைப் பாதையில் முதன்முறையாய் பேசுகிறார் கண்ணீரைத்   துடைக்க வந்தவனுக்கு கண்ணீர் எதுக்குபாவத்தின் சுமையால் - பாவமில்லாத நானே இவ்வளவு பாடுபட வேண்டுமென்றால் - பாவத்தின் அழியப்போகும் உங்கள் சந்ததியினரின் அகோர நிலை எண்ணி அழுங்கள் என்கிறார் இயேசு.
பெண்கள் கொடுமைப்படுத்தப்படும் குடும்பங்களுக்காக செபிப்போம்
ஒன்பதாம் நிலை
இயேசு மூன்றாம் முறை கீழே விழுகிறார்

     சிலுவையைச் சுமப்பதற்கு சீமோன் இருந்தும்… இயேசு மூன்றாம் முறை தவறி விழுகிறார். உதவி செய்ய உறவுகளும்தோள் கொடுக்க தோழர்களும் இருந்தாலும்தொடர்ந்து விழுவது சில நேரம் தவிர்க்க முடியாதது என இயேசு உணர்த்துகிறார். சில நேரங்களில் ஆண்டவர் தரும் சிலுவைகள் சுமக்க முடியாத அளவுக்கு பாரமாய்த் தெரிகின்றன. வாழ்வின் ஒட்டு மொத்த துன்பங்களும் ஒரே நொடியில் மூட்டையாய்க் கட்டப்பட்டு முதுகின் மேல் சுமத்தப் பட்ட உணர்வு! வலுவிழ்ந்து, உறவிழ்ந்து உருக்குலைந்த இயேசுவைப் பார்க்கும் போது, வேதனையில் மனம் வெந்தாலும்என் வேதனையை அறிந்து கொள்ளும் தெய்வம் ஒன்று உண்டு என்ற எண்ணம் ஆறுதல் தருகிறது. ஏன் எனக்கு இந்தச் சிலுவை?” என்று நம் ஆன்மா கூக்குரலிடும் பொழுதெல்லாம்எழுந்து நடப்பது சிரமம்… ஆனால் முடியாத காரியமல்ல… நானும் விழுந்தவன் தான்” என்ற இயேசுவின் குரல் நமக்குள் தைரியம் சுரக்கிறது.
குடி, போதை போன்ற பலவீனங்களில் விழுந்து கிடக்கும் குடும்பத் தலைவர்களுக்காய் செபிப்போம்.
பத்தாம் நிலை
இயேசுவின் ஆடைகள் களையப்படுகின்றன
ஆதிமனிதன் ஆதாம் நிர்வாணமாய் இருந்ததால்… தன்னைப் படைத்த ஆண்டவன் முன் வருவதற்கு அஞ்சி ஒளிந்துகொண்டான். இதோ! ஆண்டவனே ஆடை இழந்து தான் படைத்த மக்கள் முன் அஞ்சாமல் நிற்கிறார். ஆதில் பெற்றோரை… தோலால் செய்த ஆடைகளால் உடுத்தி தோட்டத்தை விட்டு அனுப்பி வைத்தார் கடவுள். இதோ! இருந்த ஒரே ஆடையையும் பறி கொடுத்து விட்டு பரிதாபமாய் நிற்கிறார் இயேசு. உங்கள் மேலாடையைக் கேட்பனுக்கு உள்ளாடையையும் கொடுங்கள் என்ற இயேசுவிடம்அவரிடம் கேட்காமலே அவருடைய ஆடைகள் திருடப்படுகின்றன. எந்த சலவைக் காரனும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேர் என்று ஒளி வீசிய இயேசுவின் ஆடைகள் கண்முன்னே களவாடப்படுகின்றன. போரில் ஜெயித்தவர்கள்தோற்றவர்களை கைதிகளாய் சிறைபிடித்து நாடு கடத்தும் போது… அவர்களுடைய ஆடைகளைக் களைந்து அம்மணமாய் அழைத்துச் செல்வது வழக்கம். அது அவமானத்தின் உச்சக்கட்டம். இதோ… இயேசு… ஞாயிற்றுக் கிழமை தன் ஆடைகளை வழியிர் விரித்து வரவேற்ற தன் மந்தையின் முன் வெள்ளிக்கிழமை நிர்வாணமாய் நிற்கிறார். இது பாவம் தந்த அடிமைத்தனம்.
சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட குடும்பங்களுக்காய் செபிப்போம்.
பதினோராம் நிலை
இயேசு சிலுவையில் அறையப்படுகிறார்
ஏற உதவிய ஏணியேஆணிகளுக்குள் அடைபடுகிறது. இயேசுவுக்கு அதிகமாக வலி தந்தது ஆணிகளை விட ஆட்கள் தான். அறைந்தவர்கள் எல்லாம் அம்புகள்தானே. எய்தவர்கள்தான் ஏராளம். முத்தம் தந்து முடிவுரை எழுதிய யூதாஸ்நிழலாய்த் தொடர்ந்து நிரந்தரமாய் விலகிப் போன சீடர்கள்பந்தியில் பங்கெடுத்து சந்தியில் சத்தியம் செய்த பேதுருஒளியை இருட்டில் விளரித்து அந்யாய தீர்ப்பு சொன்ன தலைமைச் சங்கம்… இப்படி இயேசுவுக்கு வலி தந்த காயங்களை விட துரோகிகள் ஏராளம். கடைசியாய் தாம் சுமந்து வந்த விறகுக் கட்டின் மேல் கட்டிவைக்கப்பட்ட ஈசாக்கைப் போலதாம் சுமந்து வந்த சிலுவையின் மேல் ஆணிகளால் ஒட்டப்படுகிறார் இயேசு. ஆட்கள் அல்ல… மூன்று ஆணிகள் தான் இயேசுவுக்கு சொந்தமாகின்றன. இல்லை… இல்லை இயேசுதான் அந்த ஆணிகளுக்கு சொந்தமாகிறார்.
உறவுகளின்றி தனிமரங்களாய் வாடும் குடும்பங்களுக்காக செபிப்போம்.
பனிரெண்டாம் நிலை

ஏதேன் தோட்டத்தில் ஒரு மரம். அதிலே கனி ஒன்று! பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும்விரும்பத்தக்கதாகவும் இருந்தது. அதைக் கண்ட கன்னிப் பெண் ஏவாள்அதை உண்டு சாவைப் பெற்றெடுத்தாள். கல்வாரி மலையில் ஒரு மரம்… அதிலே முழுக்க முழுக்க மரியாளின் உதிரத்திலிருந்து தோன்றிய ஒரே கனி… தொங்கியது. பார்ப்பதற்கு அழகோகவர்ச்சியோஇல்லாமல்காண்போர் கண்களை மூடிக் கொள்ளும் வகையில் அறுவெறுக்கத்தக்கதாய் இருந்தது. இந்தக் கனியைப் பறிகொடுத்து கன்னிப் பெண் மரியாள் வாழ்வைப் பெற்றெடுத்தாள். சாவு வந்த வழியாகவே வாழ்வும் வந்தது. இயேசு சாவை அதன் குகைக்குள் சென்று சந்திக்கிறாள். இயேசுவின் சாவால்சாவே சாகடிக்கப்படுகிறது.
மரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காய் செபிப்போம்.
பதிமூன்றாம் நிலை
தாயின் மடியில் இயேசு
பட்டப்பகலில் ஒரு சூரியன் படுத்துக் கிடக்கிறது. வேட்டவெளியில் பால்நிலா வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கிறது. முடிந்து போன மகனின் உடலை மாதா மடியில் சுமக்கிறாள். மடியில் மகன். இதயத்தில் தந்தை. மடியில் வார்த்தை. இதயத்தில் வாள். மரியாள் என்ன நினைத்துக் கலங்கியிருப்பாள்?
  • பட்டுப் போன்ற மகனை பட்ட மரமாய் எரித்துப்போட்ட பாவத்தை நினைத்து அழுதிருப்பாளோ?
  • அவரது அரசுக்கு முடிவு இராது என்ற வானதூதரின் வார்த்தையை நினைத்து வருந்தியிருப்பாளோ?
  • வாழ்வு முழுவதும் அன்பு என்றே துடித்த இயேசுவின் இதயம்… துளைக்கப்பட்டுத் துடிதுடித்து நின்றுபோனதை நினைத்து நிலை தடுமாறி இருப்பாளோ?
எல்லாம் நிறைவேறிவிட்டது என்று இயேசு தலை சாய்த்த போது, மரியாளின் இதயம் சாய்ந்து விட்டது. இயேசுவின் உடல் செயலற்றுப் போனபோது, மரியாளின் இதயம் செயலற்றுப் போய்விட்டது. தவிப்பது தானே தாய்மையின் வாடிக்கை.
குடும்பங்களில் துன்புறும் தாய்மார்களுக்காக செபிப்போம்.
பதினான்காம் நிலை

குற்றவாளிகளிடையே குற்றவாளியாகக் கொலை செய்யப்பட்ட இயேசுசெத்த பின்பு செல்வரோடு இருந்தார். இரண்டு செல்வர்கள்: நிக்கொதேமு  –  அரிமத்தியா யோசேப்புநிக்கொதேமு இரவில் இயேசுவைத் தேடி வந்த பரிசேயர் இஸ்ராயேலில் புகழ்பெற்ற போதகர். இயேசுவுக்காக மறைமுகமாகப் பரிந்து பேசியவர். ஓளியைத் தேடி இருளில் வந்தவர்… ஒளி அணைந்த பின்பு… மாலை நேரத்தில் அடக்கம் செய்ய வருகிறார் நன்றிக் கடனாய் முப்பது கிலோ சந்தனத்தூளும்வெள்ளைப் போளமும் கலந்து சுமந்து வருகிறார். இன்னொருவர் யோசேப்பு. பிலாத்துவிடம் துணிச்சலோடு சென்று இயேசுவின் உடலைப் கேட்கும் அளவுக்கு செல்வாக்கு படைத்தவர். தன் கல்லறையை விட்டுக் கொடுக்கும் அளவுக்கு வசதி படைத்தவர். ஆனால்… இந்த இருவருமே இயேசுவின் உயிர்ப்பை எதிர்பார்க்காதவர்கள். இந்தக் கல்லறை இன்னும் மூன்று நாளில் வெறுமையாக்கப்படும் என்பதை உணராதவர்கள். மரணம் முடிவென்றால் மனித வாழ்வில் அர்த்தம் இல்லை. விசுவாசத்துக்கு உயிர் இல்லை. மரணம் தாண்டி மறுவாழ்வை எட்டிப்பார்ப்போம். ஏனக்கொரு பங்கு தாரும் என்று இயேசுவிடம் கேட்போம்.
நம் குடும்பங்களில் இறந்தவர்களுக்காக செபிப்போம்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS